சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. ரசிகர்களின் பல கால எதிர்ப்பார்ப்பிற்கு பின் இந்த வாரம் நிறைவேறவுள்ளது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்துதான் இந்தப் படத்தை இயக்கியியுள்ளார்.
விக்ரம் அலை
விக்ரம் படத்திற்கு நடிகர் கமல் ஹாசன் தனி ஆளாக அனைத்து ஊர்களுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று புரொமோட் செய்தார். அதன் விளைவாக படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. இப்போது அதனை பலரும் பின் தொடரலாம் என முடிவெடுத்துள்ளார்கள் போல. நடிகர் விக்ரம் கூட இந்தப் படத்திற்காக பல ஊர்களுக்கு சென்று புரொமோட் செய்து வருகிறார்.

இர்ஃபான் பதான்
கோப்ரா திரைப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர் மற்றும் நடிகைகள் ஸ்ரீநிதி, மிருணாளினி ரவி, மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான் முதன் முதலாக நடிகராக ஐந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

மியா ஜார்ஜ்
சமீபத்தில் இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நடந்தபோது அதில் நடித்துள்ள மீயா ஜார்ஜ் சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். இந்தப் படத்தில் ஒப்பந்தமானபோது தான் சிங்கிளாக இருந்ததாகவும், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பின்போது தனக்கு திருமணம் முடிந்திருந்ததாகவும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், நான்காவது கட்டப் படப்பிடிப்பில் தனக்கு குழந்தை பிறந்ததாகவும், இப்போது படத்தின் புரமோஷனில் அந்தக் குழந்தை வளர்ந்து ஒரு வயது ஆகியுள்ளதாகவும் அவ்வளவு ஆண்டுகள் இந்தப் படத்தை எடுத்தார்கள் என்று மியா ஜார்ஜ் வேடிக்கையாக கூறினார்.

கோப்ரா குழந்தை
மியா ஜார்ஜ் கூறியது வஞ்சப் புகழ்ச்சி அணி போல இருப்பதாக நடிகர் விக்ரமுக்கு தோன்றியதோ என்னவோ உடனே அந்தக் குழந்தையை மேடைக்கு கூட்டிச் சென்று இது கோப்ரா குழந்தை என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்தி அந்த மேடையை கலகலப்பாக்கினார். வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பல முன்னணி நடிகர்கள், விக்ரமிற்கு பல்வேறு கெட்டப்புகள் என்று இந்தப் படம் வெற்றியடைவதற்கான பல அம்சங்கள் கோப்ராவில் உள்ளது. இதற்கு முன்னர் இதே போல் ஹைப் கிரியேட் செய்து பின்னர் சொதப்பிய விக்ரம் படங்களை போல அல்லாமல் இந்தப் படம் உண்மையாகவே வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.