செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகெங்கிலும் திரைக்கு வரவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இதற்கிடையே, கோப்ரா படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
#CobraBookingsOpen @AjayGnanamuthu @arrahman @7screenstudio @RedGiantMovies_ @Udhaystalin @SrinidhiShetty7 @mirnaliniravi @MeenakshiGovin2 @IrfanPathan @dop_harish @SonyMusicSouth @proyuvraaj #Cobra#CobraFromAugust31 pic.twitter.com/0T8OvMAFgr
— Chiyaan Vikram (@chiyaan) August 27, 2022
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில், பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கோப்ரா படத்துக்கு முதலில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அப்படத்துக்கு தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.