திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்க மேற்கூரையில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க மேற்கூரையிலிருந்து நீர்க்கசிவு ஏற்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சீரமைப்புப் பணிகளை தொடங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்தது. கூரை முழுவதும் தங்கத் தகடுகள் வேயப்பட்டிருப்பதால் சபரிமலை கோயில் தங்க கொடிமரத்திற்கான பணிகளை மேற்கொண்ட தலைமை சிற்பி பழனி ஆசாரியை வரவழைத்து நீர்க்கசிவு எங்கிருந்து வருகிறது என கண்டுபிடிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 3ம்தேதி தலைமை சிற்பி உள்பட 3 பேர் மேற்கூரையில் ஏறி நீர்க்கசிவு வரும் இடத்தை கண்டுபிடித்தனர். இந்நிலையில், இன்று (29ம் தேதி) முதல் சீரமைப்புப் பணிகளை தொடங்கப்பட உள்ளது. நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள இடத்தில் உள்ள நான்கு தங்கத் தகடுகளை மட்டும் நீக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் அனைத்து தங்கத் தகடுகளும் இணையும் பகுதிகளில் நீர் கசியாமல் இருக்கும் வகையில் பசை உபயோகித்து பலப்படுத்தப்படும். ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக செப்டம்பர் 6ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. அதற்குள், இந்த பணி முடிக்கப்பட உள்ளது.