புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று கூறியதாவது. 75-வது ஆண்டு சுதந்திர அமுதப் பெருவிழாவின் தொடர்ச்சியாக குஜராத் சபர்மதி ஆற்றங்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற காதி நிகழ்ச்சியில் பேசியபிரதமர் மோடி “காதி, தற்சார்பு இந்தியா கனவை அடைவதற்கான உத்வேகத்தின் ஆதாரம்” என்று தெரிவித்துள்ளார்.
இது அவரின் சொல் ஒன்று செயல் வேறொன்று குணத்தை எடுத்துக்காட்டுகிறது. தேசத்துக்கு காதி, ஆனால் தேசியக் கொடிக்கு சீன பாலியெஸ்டர். பிரதமர் மோடியிடம் சொல்லும், செயலும் எப்போதும் ஒரே விதமாக இருந்ததில்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி வழிகாட்டு விதிமுறைகளில் மத்திய அரசு பல திருத்தங்களை வெளியிட்டது. அதில், கையினால் நெய்யப்பட்ட, இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பருத்தி, பாலியெஸ்டர், கம்பளி, சில்க் காதியால் ஆன தேசிய கொடிகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
தேசிய கொடி தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.