முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்தது. இதில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை 6 மணி அளவில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டர்.
இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தொடர்பாக இயற்றப்படும் அவசர சட்டம் நீதிமன்றம் சென்று தடை பெற முடியாத அளவுக்கு இருக்கும் வகையில் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தாக்கல் செய்த அறிக்கை; பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையம்; தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில், ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆகியோரின் அறிக்கைகளை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.