தமிழ்நாட்டில் உள்ள கேவி பள்ளிகளில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலி! மத்திய பாஜக அரசுமீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் 45 இடங்களில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள கேவி பள்ளிகளில்  12,044  பணியிடங்கள் காலியாக உள்ளது. இது பெற்றோர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், விரைவாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் மத்தியஅரசை வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியா முழுவதும் 1,199 பள்ளிகளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்வதால், இங்கு கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. தமிழ்நாட்டில் மட்டும் 45 கே.வி.க்கள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில்தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தற்போது, முதலாம் வகுப்பில் சேர, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு. இதற்கிடையில், மேலும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த 2020ம் ஆண்டு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால், இந்த பள்ளிகளில் போதுமான அளவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது இல்லை. இதனால், அங்கு படிக்கும் மாணாக்கர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 1,199 கேவி பள்ளிகளில், 12,044 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது 40சதவிகித கேவி பள்ளிகளில், முதல்வர் பதவியே காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அதிக பட்சமாக  தமிழ்நாட்டில் மொத்தமுள்ள  45 கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

2வதாக மத்தியபிரதேசத்தில் 1066 இடங்களும், கர்நாடகாவில் 1066 இடங்களும், மேற்குவங்கத்தில் 964 இடங்களும், ஒடிசாவில் 886 இடங்களும், மகாராஷ்டிராவில் 705 இடங்களும், கேரளாவில் 699 இடங்களும், ஆந்திராவில் 658 இடங்களும் உத்தரபிரதேசத்தில் 618 இடங்களும், தெலுங்கானாவில் 602 இடங்களும் காலியாக உள்ளன.

மத்தியஅரசு உடனே காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.