திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையான். இவரது மனைவி ராணியம்மாள். இவர்கள், கடந்த 40 வருடங்களாக கீழ்சீசமங்கலம் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் குடிக்கவும், சமையல் செய்யவும் மழைநீரையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்தே மழைநீரை மட்டுமே சேமித்து உபயோகிக்க வருகின்றோம். இதற்காக மழை பெய்யும் போதெல்லாம் பேரல்கள், அண்டாக்கள், சிறுசிறு பாத்திரங்கள் என அனைத்திலும் மழைநீரை சேமித்து வைத்துக் கொள்வோம்.
மழைநீரை எவ்வளவு நாள் வேணும் என்றாலும் சேமித்து வைக்கலாம். மழை பெய்யத் தொடங்கியதும் வீட்டுக் கூரையின் மேல் உள்ள அழுக்கு போன பின்னர், கூரையிலிருந்து வழியும் சுத்தமான நீரை பிடித்து சேமித்து வைத்துக் கொள்வோம். பின்னர் அந்த நீரை வடிகட்டி காய்ச்சி பயன்படுத்துவோம்.
மழைநீரை மட்டுமே உபயோகித்து வருவதால் உடல்நல பாதிப்பு ஏதும் இல்லாமல், மருத்துவர்களை அணுகாமல் வாழ்ந்து வருகிறோம். எங்களை பார்த்து அருகிலுள்ள வீட்டினரும் மழைநீரை சேமித்து உபயோகிக்க தொடங்கி உள்ளனர். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.