தொழிலாளர் பிணக்குகளை தீர்ப்பதில் ஏற்பட்ட தாமதம் : உடனடி விசாரணை

தொழில் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள தொழிலாளர் பிணக்குகளை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் உடனடி விசாரணையை நடத்தவும், அது குறித்து, தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் விளக்கம் கோரவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.

மாவட்ட தொழில் அலுவலக அதிகாரிங்களுடன் இன்று (29) நடைபெற்ற ஜூம் Zoom  கலந்துரையாடலில், இதுவரையில் தீர்க்கப்படாத தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

அதன்படி கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி வரை 9,585 தொழிலாளர் பிணக்குகளுக்கு தீர்வு காணப்படவில்லை என அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி வரை, 10,596 தொழிலாளர் பிணக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன. மற்றும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை 4,935 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த காலகட்டத்தில் 5,946 தொழிலாளர் பிணக்குகள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜூலை மாதம் 31ஆம் திகதி வரை 9,585 தொழிலாளர் பிணக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை 4,103 தொழிலாளர் பிணக்குகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 408 பிணக்குகளுக்கு மாத்திரமே தீர்வு காணப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 3,695 தொழிலாளர் பிணக்குகள் தீர்க்கப்பட உள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட பிரதிநிதி சமர்ப்பித்துள்ள, தொழிலாளர் பிரச்சினைகளை வினைத்திறனுடன் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பான அறிக்கை குறித்தும் கவனம் செலுத்திய அமைச்சர்,அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளர் முரண்பாடுகள் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், அதற்காக தொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் மிகவும் திறமையாகவும் வினைத்திறனுடனும் பணியாற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.