மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட், நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூரில் உள்ள மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில், நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை, உள்ளாடைகளை அகற்றிவிட்டே தேர்வு ஹாலுக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவிகளின் ஆடைகளில் உலோகத்தால் ஆன ஹூக், ஹேர்பின் போன்றவை இருக்கக்கூடாது என விதிமுறை உள்ளது. இது தெரிந்த, ஏற்கெனவே நீட் தேர்வில் கலந்து கொண்ட மாணவிகள் பிளாஸ்டிக் ஹூக் கொண்ட உள்ளாடைகளை அணிந்து சென்றனர். ஆனால், அதையும் அகற்றிய பிறகே மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டதால் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். அதிலும் உள்ளாடையை அகற்றிய பின், ஒரே தேர்வு அறையில் மாணவர்களுடன் தேர்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். மொத்தத்தில், ஹாலுக்குள் கூனிக்குறுகியபடி அமர்ந்து தேர்வு எழுதியதாக மாணவிகள் குமுறலுடன் கூறியிருந்தனர். தேர்வு எழுதிய பிறகு தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல முடியாமலும், இருட்டு அறைக்குள் குவிந்து கிடந்த உள்ளாடைகளை தேடி எடுக்க முடியாமலும் மாணவிகள் கதறி அழுத சம்பவம் பெற்றோர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உள்ளாடைகளை அகற்றச்சொன்ன விவகாரம் குறித்து, ஒரு பெற்றோர் கொல்லம் ரூரல் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றச்சொன்ன அதிகாரிகள் மீது கொல்லம் மாவட்டம் சடையமங்கலம் காவல் நிலையத்தில் பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள், தேர்வுப் பணிக்காக வந்த என்.டி.ஏ ஏஜென்சியை சேர்ந்த மூன்று பேர் என, ஐந்து பெண் ஊழியர்கள், தேர்வு நடத்தும் பொறுப்பில் இருந்த என்.டி.ஏ அப்சர்வர் டாக்டர் ஷாம் நாத், தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர் பிரிஜி குரியன் ஐசக் உள்ளிட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகள் அகற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குழு அறிக்கையின்படி, கொல்லம் மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் நீட் தேர்வு எழுதிய மாணவிகளுக்கு, மீண்டும் வரும் செப்டம்பர் 4-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது. ஆனால், தேர்வு நடக்கும் மையம் மாற்றப்பட்டுள்ளது. கொல்லம் எஸ்.என் ஸ்கூலில் மதியம் 2 மணி முதல், மாலை 5.30 மணிவரை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். `இந்தத் தேர்வு எழுத விரும்பவில்லை, இதற்கு முன்பு எழுதிய தேர்வின் மதிப்பெண் போதும்’ என முடிவெடுக்கும் மாணவிகள் தேர்வில் கலந்துகொள்ள வேண்டாம்’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி கேரளத்தின் கொல்லத்தில் மட்டுமல்லாது, இதுபோன்று புகார் எழுந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மையங்களிலும் செப்டம்பர் 4-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.