மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி, இவர் மதுரை மாவட்ட மைய நூலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜாகீர் உஷேன் என்பவர் பாரதிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பழக்கம் ஏற்படுத்தி கொண்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஜாகீர் உசேன், தனது சித்தப்பா சென்னை தலைமை செயலகத்தில் உயர் பொறுப்பில் பணிபுரிந்து வருவதாகவும், எனவே பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி, அவரது உறவினர் நிறைமதி, முரளி சுந்தர் மற்றும் காளீஸ்வரி உட்பட 6 பேரிடம் மொத்தமாக 19 லட்ச ரூபாய் நேரடியாகவும், வங்கி பரிவர்த்தனை மூலம் வாங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர்களுக்கு வருமான வரித்துறை, ரயில்வே, சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
பணம் கொடுத்து 3 வருடங்களாகியும் அரசு வேலை வாங்கித்தராமல் ஜாகீர் உசேன் தாமதித்துள்ளார். இது குறித்து பணம் கொடுத்தவர்கள் ஜாகீர் உசேனிடம் கேட்ட நிலையில் பணத்தை திருப்பி தர முடியாது என கூறி, மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பணத்தை திருப்பி வாங்கித் தரக்கோரியும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.