இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர்மழையால் 3-இல் ஒரு பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் உணவு பொருட்கள், காய்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்ய அந்நாட்டு அமைச்சர் பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து இன்னும் விடாமல் பெய்து வருகிறது. கொட்டித்தீர்த்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1,100-க்கும் மேற்பட்டோர் பலி
மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். கனமழையால் பாகிஸ்தானில் 1,100-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழ்நததாக அந்நாட்டு அதிகரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் லட்சக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
நீரை வெளியேற்றவும் வழியில்லை
நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. இந்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்த நாட்டின் அமைச்சர் ஷெர்ரி ரகுமான் தெரிவித்தார். மேலும், கடல் போல வெள்ளம் பல இடங்களில் பரவியிருப்பதாகவும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக வறண்ட நிலை என எதுவும் இல்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.
விவசாயிகளின் விலை பொருட்கள்
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானை புரட்டி போட்ட இந்த மழையால் அந்நாட்டின் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பழத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் என எங்கும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதனால், விவசாயிகளின் விலை பொருட்கள் அழுகி நாசம் அடையும் நிலைக்கு சென்றுவிட்டது. இதனால், ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளை இறக்குமதி செய்கிறது. ஆப்பிள், வாழப்பழங்கள் போன்றவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒரு கிலோ தக்காளி 500 ரூபாய்
லாகூரில் உள்ள மிகப்பெரிய சந்தையில் நேற்று ஒரு கிலோ வெங்காயம் மற்றும் தக்காளி முறையே ரூ 500 மற்றும் 400 ஆக விற்பனையானது. வரும் நாட்களில் இந்த விலை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், பலோசிஸ்தான் மற்றும் தெற்கு பஞ்சாப், சிந்த் மகாணங்கள் வெள்ளத்தில் மிதப்பதால் அங்கிருந்து காய்கறி சப்ளை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில், வரலாறு காணாத விலை உயர்வு மற்றும் காய்கறிகள், பழங்களுக்கான தட்டுப்பாட்டை போக்க இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று பாகிஸ்தானின் நிதி அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து காய்கறிகள்
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் கூறுகையில், ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து காய்கறிகள் மற்றும் பிற உணவு பொருட்களை இறக்குதி செய்வது குறித்து பாகிஸ்தான் பரிசீலிக்கலாம்” என்றார். இந்தியாவுடனான வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மோயித் யூசுப், பணியாற்றி வருவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் எதிர்ப்புகள்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை பாகிஸ்தான் வெகுவாக குறைத்தது. எனினும், பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் பாகிஸ்தான் தனது முடிவில் இருந்து பின்வாங்கி கடந்த ஆண்டு தனியார் துறையினர் இந்தியாவில் இருந்து வெள்ளை சர்க்கரை மற்றும் காட்டன் பொருட்களை வாகா எல்லை வழியாக இறக்குமதி செய்யலாம் என்று அறிவித்தனர். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் இந்த முடிவு திரும்பப்பெறப்பட்டது.