சென்னை, சாலிகிராமம், கெங்கப்பா தெருவைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 26.8.2022-ம் தேதி கொடுத்த புகாரில், “நான் மேற்கண்ட முகவரியில் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எங்களுக்குச் சொந்தமாக சாலிகிராமம் பகுதியில் தங்கும் விடுதி உள்ளது. அதை கடந்த 2021-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். எங்களது விடுதியில் 21 அறைகள் உள்ளன. கடந்த 26.8.2022-ம் தேதி இரவு 8 மணியளவில் நான் விடுதியின் தரைதளத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்தேன். அப்போது வரவேற்பில் எங்கள் விடுதியில் பணிபுரியும் ரூம்பாய் பிகாஸ் என்பவர் அமர்ந்திருந்தார்.
திடீரென்று வரவேற்பு பகுதியில் கண்ணாடி பாட்டில் உடையும் சத்தம் கேட்டது. நான் உடனே அலுவலகத்திலிருந்து வெளியே பார்த்தபோது எங்கள் விடுதியின் முன் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய அரக்கு நிற சட்டை, வெளீர் சிமன்ட் நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்த தாடியுடன் கூடிய ஒரு நபரின் கையில் பெட்ரோல் குண்டு இருந்தது. அதை எங்களை நோக்கி எரிந்தார். அந்த பெட்ரோல் குண்டு, என்மீது படாமல் விடுதியின் நுழைவு வாயிலில் உள்ள கண்ணாடியில் விழுந்து சிதறியது. அதில் எங்கள் நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
உடனே நானும் பிகாஸூம் கத்திக் கொண்டே அந்த நபரை பிடிக்கச் சென்றோம். அப்போது அந்த நபர் ஓடிச் சென்று எங்கள் விடுதியின் வலது ஓரத்தில் ஏற்கெனவே தயாராக நின்று கொண்டிருந்தவரின் பைக்கில் ஏறி இருவருமாக தப்பிச் சென்றுவிட்டார்கள். எனவே எங்கள் விடுதியை சேதப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பெட்ரோல் குண்டுகளை எரிந்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.
சிசிடிவி கேமராப் பதிவுகள், செல்போன் சிக்னல் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெட்ரோல் குண்டுகளை வீசியது மதுரவாயலைச் சேர்ந்த வினோத் எனத் தெரியவந்தது. இதையடுத்து கே.கே.நகரில் உள்ள விடுதியில் தலைமறைவாக இருந்த வினோத்தை போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “விடுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் வினோத் என்பவரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்மீது மதுரவாயல், கூடுவாஞ்சேரி காவல் நிலையங்களில் 3 கொலை வழக்குகள் உள்ளன. மதுரவாயல் கொலை வழக்கில் தொடர்புடைய தன்னுடைய கூட்டாளி ஒருவரை அழைத்துக்கொண்டு வந்த வினோத், பெட்ரோல் குண்டுகளை விடுதியில் வீசியிருக்கிறார். அதனால் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வினோத்தின் கூட்டாளியைத் தேடிவருகிறோம். மேலும் விசாரணையில் வினோத், பாலியல் தொழில் புரோக்கர் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. அந்த தொழில் போட்டி காரணமாகத்தான் விடுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.