மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையமா… மதுரை எம்பி மத்திய அரசுக்கு கடிதம்!

மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2022 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலை கழகம். அப்பல்கலைகழகம் திருவாரூரில் உள்ளது. அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளது. அவர் மதுரைக்காரர். இந்நிலையில் அனுமதிச்சீட்டை பிரித்துப் பார்த்த அவரது தந்தைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தேர்வு மையம் லட்சத் தீவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு,வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், தேர்வு எழுதுவதற்கு எப்படி மாணவர் போவார். கப்பலில் அல்லது விமானத்தில் போவாரா. நுழைவுத்தேர்வுக்கு அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா? இப்படி ஒரு வாரம் கூட அவகாசம் தராமல் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவது என்றால் எவ்வளவு செலவு ஏற்படும். விமான கட்டணம் நாளுக்கு நாள் ஏறும். இதில் அனுமதிச் சீட்டோடு வந்துள்ள அறிவுரை சீட்டில் ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தைப் பார்த்துக் கொள்ளுங்க என்று ஆலோசனை வேறு வழங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மாணவரின் தந்தை பதறிப் போய் தன்னிடம் வந்தார் எனவும் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். இவரைப் போல எத்தனை மாணவர்கள், பெற்றோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரோ என தெரியவில்லை. ஏழை, நடுத்தர குடும்பங்கள் என்ன செய்யும்? மன உளைச்சல்… பணத்திற்கும் அலைச்சல்… என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து உயர் கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றும், இது போன்ற மாணவர்களுக்கு மையத்தை மாற்றுங்கள் என்று கூறியுள்ளேன். தேர்ச்சி பெறுவதை விட தேர்வு மையத்துக்கு சென்று சேர்வது கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள் என கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சு,வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.