மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மதுரை மாணவருக்கு, மாலத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சு.வெங்கடேசனின் எதிர்ப்புக்குப் பின், மதுரையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்வு மைய ஒதுக்கீட்டில் என்ன நடந்தது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் பேசினோம். “மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு நாளைய தினம் (ஆகஸ்ட் 30) அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் அமைந்துள்ள தமிழகத்தின் ஒரே மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பித்த மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த மாணவருக்கு, தேர்வு எழுத அனுமதி சீட்டு அடங்கிய கடிதம், 2 நாள்களுக்கு முன் வந்துள்ளது.
அனுமதி சீட்டை பார்த்த மாணவருக்கும் பெற்றோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், தேர்வு மையம் லட்சத்தீவு எனக் குறிப்பிட்டிருந்தனர்.
தமிழகத்தில் ஒரு தேர்வு மையத்தை குறிப்பிடாமல் லட்சத்தீவில் எழுதச் சொன்னால் அந்த மாணவர் எப்படி போவார்? கப்பல் அல்லது விமானத்தில்தான் லட்சத்தீவு செல்ல முடியும். விமானக் கட்டணம் அதிகம். அப்படியே போக நினைத்தாலும் அதற்கு டிக்கெட் வாங்க கால அவகாசம் இல்லை. மாணவரின் பெற்றோருக்கு இது அதிகப்படியான செலவையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.
இதில் கொடுமை என்னவென்றால், அனுமதிச் சீட்டோடு வந்துள்ள அறிவுரை சீட்டில், ஒரு நாள் முன்பாகவே வந்து தேர்வு மையத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை வேறு.
மாணவரின் தந்தை பதறிப்போய் என்னிடம் கூறினார். இவரைப்போல இன்னும் எத்தனை மாணவர்கள், பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்களோ தெரியவில்லை. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு எவ்வளவு சிரமம்?
’தேர்ச்சி பெறுவதை விட, தேர்வு மையத்துக்கு சென்று சேர்வதே கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள். இதுபோன்ற மாணவர்களுக்கு தேர்வு மையத்தை மாற்றுங்கள்’ என்று உயர்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதினேன்.
அதன் விளைவால் தற்போது மதுரை மாணவருக்கு தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.