கவுகாத்தி: பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை களைய நாட்டின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒன்று என 5 தலைநகரங்கள் அமைக்கலாமா என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி கேட்டுள்ளார்.ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பாஜவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கும் இடையே அரசு பள்ளிகள் தொடர்பாக டிவிட்டரில் கருத்து மோதல் வலுத்து வருகிறது.
அசாமில் மோசமான முடிவுகள் காரணமாக அந்த மாநில அரசு 34 பள்ளிகளை மூடியதாக வெளியான செய்திகளை தனது டிவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் பகிர்ந்திருந்தார். கெஜ்ரிவால் டெல்லியை கவுகாத்தி மற்றும் ஷில்லாங்குடன் ஒப்பிடுவதற்குப் பதிலாக நியூயார்க், டோக்கியோ நகரங்களுடன் ஒப்பிட வேண்டும் என்று சர்மா பதிலளித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் சர்மா நேற்று டிவிட்டர் பதிவில், ‘ஏழை மாநிலங்களை கிண்டலடிப்பதை விட்டு மாநிலங்கள் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை போக்க நாம் ஒன்றாக உழைக்க வேண்டும்.
அதன்படி, நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒன்று என மொத்தம் 5 தலைநகரங்களை அமைக்கலாம். இந்த திட்டத்தால் தலைநகரான டெல்லிக்கு கிடைத்து வரும் அபரிமிதமான வளங்கள் குறைந்து விடும். 70 வருட புறக்கணிப்புக்கு பின் கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமரான பின்னர் வட கிழக்கு பிராந்தியம் நாட்டின் இதர பகுதிகளுடன் ஐக்கியமாகி வருகிறது. வட கிழக்கு மாநிலங்களுக்கு யாரும் இரக்கம் காட்ட தேவை இல்லை. எங்களுக்கு உரிய மரியாதை, வளங்கள் மட்டுமே தேவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.