சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசரச் சட்டம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம், இன்று மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதையடுத்து, அந்த விளையாட்டுகளை தடை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் நிதியிழப்பு குறித்தும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து அரசுக்குஅறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருதலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, கடந்த ஜூலை27-ம் தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் அளித்தது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையிலும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது இதற்கான இறுதி முடிவானது, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது அறிக்கையை முதல்வரிடம் நேற்று முன்தினம்வழங்கியது. இந்த அறிக்கைகுறித்தும், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம், புதிய முதலீடுகளுக்கான அனுமதிஉள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.
மேலும், முதல்வருக்கான தகவல் பலகையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் அவ்வப்போது கண்காணித்து வருகிறார். அதனடிப்படையில், அமைச்சர்களின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, அரசுத் துறைகளின் திட்டங்கள் குறித்த அறிவுறுத்தல்களை அமைச்சர்களுக்கு முதல்வர் வழங்குவார் என கூறப்படுகிறது.