புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான மனு தாக்கல் செப். 24-ல் தொடங்கும் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. 2019 மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை பறிகொடுத்தது. 2019 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதனால், இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
அதன்பின், கட்சியில் சீர்திருத்தம் தேவை என கட்சி மூத்த தலைவர்கள் அடங்கிய ஜி-23 குழு வலியுறுத்தியது. அமைப்பு ரீதியான தேர்தல்களை நடத்த வேண்டும். கட்சித் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என அந்தக் குழு கூறியது. இதனால், இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா முன்வந்தார். ஆனால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இப்பதவியில் தொடர வேண்டும் என சோனியாவை காங்கிரஸ் செயற்குழு கேட்டுக் கொண்டது.
இதனிடையே, கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்து வந்த மூத்த தலைவர்கள் பிரியங்கா சதுர்வேதி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அமரிந்தர் சிங், ஜிதின் பிரசாத், கபில் சிபில் என பலர் அடுத்தடுத்து காங்கிரஸில் இருந்து விலகினர். மற்றொரு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கடந்த வெள்ளிக்கிழமை கட்சியில் இருந்து விலகினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு, ஆசாத் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், ராகுல் காந்தி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றபின், கலந்தாலோசித்து முடிவெடுக்கும் முறையை முற்றிலுமாக ஒழித்தார் எனவும், அனுபவம் இல்லாதவர்களையும், துதிபாடிகளையும் வைத்துக்கொண்டு கட்சி நடத்துகிறார் எனவும் அவர் கூறியிருந்தார்.
மருத்துவ சிகிச்சைக்காக சோனியா வெளிநாடு சென்றுள்ளார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரும் சென்றுள்ளனர். இந்தச் சூழலில், குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகியதும், ராகுல் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை சுமத்தியதும் சோனியாவுக்கு அதிர்ச்சியையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை உடனடியாக கூட்டி, கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை அறிவிக்குமாறு சோனியா உத்தரவிட்டார். அதன்படி, காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் நேற்று மாலை 3.30 மணிக்கு நடந்தது. சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கூட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ஆனந்த்சர்மா, அம்பிகா சோனி, மீராகுமார், தீபிந்தர் ஹூடா மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்தினார். சுமார்30 நிமிடங்கள் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், வேணுகோபால் ஆகியோர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு செப். 22-ம் தேதி வெளியிடப்படும். இதற்கான மனு தாக்கல் செப். 24-ல் தொடங்கி 30-ம் தேதி நிறைவடையும். கட்சியின் மாநில தலைமை அலுவலகங்களில் அக்.17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதன் முடிவுகள் அக்.19-ம் தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல், 2022 செப்.20-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் தலைமையில் பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது. அதன்படி, கன்னியாகுமரியில் அடுத்த மாதம் 7-ம் தேதி பாதயாத்திரையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்சித் தலைவர் தேர்தலை நடத்துவது தாமதமானது.
காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகிய சூழலில், கட்சித் தலைவர் தேர்தல் அறிவிப்பை உடனே வெளியிட சோனியா காந்தி முடிவு செய்தார். அதன்படி, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, தேர்தல் தேதி வெளியிடப்பட்டது.