கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவேன் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருபவர் மம்தா பானர்ஜி.
பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மம்தா பானர்ஜி, வரும் 2024- ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அணியை திரட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
மத்திய அரசை விமர்சித்த மம்தா
இதற்காக அவ்வப்போது எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் அறிவிப்பில் முக்கிய பங்கு வகித்தார். அதிரடி அரசியலுக்கு பெயர் போன மம்தா பானர்ஜி தனது கட்சியினர் மத்தியில் தற்போது பேசியதுதான் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினர் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி மத்திய அரசை விமர்சித்து ஆவேசமாக பேசினார்.
விசாரணைக்கு வருமாறு இங்கு அழைப்பேன்
இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசுகையில், ”மேற்கு வங்காளத்தில் பணிபுரியும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக என்னிடமும் வழக்குகள் நிறைய உள்ளன. எனவே, எனது அதிகாரிகளை நீங்கள் (மத்திய அரசு) டெல்லிக்கு விசாரணைக்கு அழைத்தால், உங்கள் அதிகாரிகளை நான் விசாரணைக்கு வருமாறு இங்கு அழைப்பேன். மேற்கு வங்காளத்தில் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகள் 8 பேருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. சிபிஐ மூலமாக மேற்கு வங்க அதிகாரிகளை மத்திய அரசு கைது செய்கிறது. நான் இதை குறித்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றார்.
ஜனநாயக அமைப்புகளை பாஜக பயமுறுத்துகிறது
தொடர்ந்து பார்த்தா சட்டர்ஜி மீதான வழக்கு குறித்து பேசிய மம்தா பானர்ஜி கூறுகையில், ”பார்த்தா சட்டர்ஜி மீதான எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபணம் செய்யப்படவில்லை. அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்தி நீதிமன்றம், ஊடகம், அரசியல் கட்சிகள் என நாட்டில் ஜனநாயக அமைப்புகளை பாஜக பயமுறுத்துகிறது. பார்த்தா சட்டர்ஜி மீதான வழக்கை பொறுத்தவரை இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையின் கீழ் உள்ளது.
48 மணி நேரம் தர்ணா போராட்டம்
எந்த குற்றச்சாட்டும் இன்னும் நிரூபணம் செய்யப்படவில்லை. மீடியாக்களின் விசாரணை தான் நடைபெற்று வருகிறது. பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து 48 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.