புதுடில்லி :’ரபேல்’ விமான ஒப்பந்த முறைகேடு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததை அடுத்து, மனுதாரர் வழக்கை திரும்ப பெற்றார். கடந்த 2012-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து, 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால், 2014ல் பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன், 2015ல் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றார். ‘அப்போது, 36 ரபேல் விமானங்கள் மட்டுமே வாங்கப்படும்; முந்தைய அரசில் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதி ஆனது’ என அறிவித்தார். இதைத் தொடர்ந்து, 2016ல் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.புதிய ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்., – எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம், ‘ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை’ எனக்கூறி அதை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர், சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவையும் உச்ச
நீதிமன்றம் 2019ல் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ‘ரபேல் ஒப்பந்தத்தில், இந்திய இடைத் தரகர்களுக்கு, ‘டாசால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் லஞ்சம் கொடுத்தது’ என, பிரான்ஸ் நாட்டு பத்திரிகைகளில் வெளியான செய்திகளை ஆதாரமாக வைத்து, வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, உச்ச
நீதிமன்றத்தில் புதிய பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவில், ‘ரபேல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்ததை அடுத்து, மனுதாரர் வழக்கை திரும்ப பெற்றார்.
புதிய நடைமுறை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த என்.வி.ரமணாவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் சமீபத்தில் பொறுப்பேற்றார். வரும் நவ., 8ல் இவருக்கு 65 வயது பூர்த்தி அடைவதை அடுத்து, 74 நாட்கள் மட்டுமே இவர் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார். அதன் பின் பணி ஓய்வு பெறுகிறார்.இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் தன் பணிகளை நேற்று துவக்கினார். உச்ச நீதிமன்றத்தில் 60 பொதுநல மனுக்கள் உட்பட, 900 மனுக்கள் நேற்று பட்டியலிடப்பட்டன. நீதிபதி ரவீந்திர பட் உடன் இணைந்து, 62 மனுக்களை தலைமை நீதிபதி லலித் நேற்று
விசாரித்தார். அப்போது, ”மனுக்களை அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டாம். நீதிமன்ற பதிவரை அணுகி, வழக்கை பட்டியலிடுவது குறித்து கோரிக்கை வைக்கும் நடைமுறை, செப்., 1 முதல் நடைமுறைக்கு வரும்,” என லலித் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement