உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள நொய்டாவில் நேற்று சூப்பர் டேக் நிறுவனம் கட்டிய இரட்டை கோபுரம் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
சுமார் 20 கோடி மதிப்புள்ள வெடி பொருட்கள் வைக்கப்பட்டு 9 நிமிடங்களில் இந்த இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சூப்பர்டெக் நிறுவனம் இந்த நஷ்டத்தில் இருந்து நாங்கள் மீண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளது.
3 வருடத்தில் ரூ.9 லட்சத்துக்கும் மேல் லாபம்.. முதலீடு எவ்வளவு தெரியுமா?
சூப்பர்டெக் நிறுவனம்
சூப்பர் டேக் நிறுவனம் கட்டிய நொய்டாவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்டதால் அதன் கட்டுமானம் மற்றும் வட்டி செலவு உள்பட சுமார் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்கே அரோரா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ரூ.20 கோடி செலவு
இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இடிக்கப்பட்டது. சுமார் 3700 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் இடிப்பதற்கான செலவு மட்டும் ரூபாய் 20 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.500 கோடி நஷ்டம்
இந்த நிலையில் சூப்பர்டெக் நிறுவனத்தின் ஆர்கே அரோரா இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இரட்டை கோபுரம் கட்டுவதற்காக நிலம் மற்றும் கட்டுமான செலவுக்காக நாங்கள் செலவு செய்த தொகை மற்றும் பல்வேறு ஒப்புதலுக்காக அதிகாரிகளுக்கு செலுத்தப்பட்ட கட்டணம், பல ஆண்டுகளாக வங்கிகளுக்கு செலுத்தப்பட்ட வட்டி ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.500 கோடி நஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.
எமரால்டு கோல்டு திட்டம்
இந்த இரட்டை கோபுர கட்டிடம் கட்டும் திட்டம் என்பது எங்களுடைய எமரால்டு கோல்டு திட்டத்தின் ஒரு பகுதி என்றும், இரண்டிலும் சேர்த்து 900க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் இருந்ததாகவும், இதன் சந்தை மதிப்பு ரூபாய் 700 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆர்கே அரோரா தெரிவித்துள்ளார்.
அனுமதி பெற்றே கட்டினோம்
இந்த இரண்டு கோபுரங்களில் கட்டப்பட்ட வீடுகளின் மொத்த பரப்பளவு சுமார் 8 லட்சம் சதுர அடி என்றும் நொய்டா மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட திட்டத்தின்படி அனுமதி பெற்று தான் நாங்கள் இந்த கோபுரங்களை கட்டினோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காப்பீடு தொகை
இந்த கட்டிடத்தை இடிப்பதற்கான செலவில் சூப்பர்டெக் நிறுவனம் ரூ 17.5 கோடி மும்பையிலுள்ள நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்த அரோரா, ரூபாய் 100 கோடி காப்பீடு தொகைக்கான பிரீமியம் தொகையில் உள்கட்டமைப்புகள் மற்றும் இடிபாடுகளினால் ஏற்பட்ட கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் பணியிலும் தற்போது ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இழப்பீடு
மேலும் இந்த இரட்டை கோபுரம் கட்டியதால் அருகில் உள்ள குடியிருப்போர் நல சங்கத்திற்கு ரூபாய் 2 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு இல்லை
இந்த நிலையில் சூப்பர்டெக் நிறுவனம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், ‘சூப்பர் டேக் நிறுவனத்தின் நொய்டா இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதால் எங்களுடைய மற்ற திட்டங்கள் பாதிக்காது என்றும் நாங்கள் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.
மீண்டு வருவோம்
மேலும் இனியும் தொடர்ந்து வீடு வாங்குபவர்களுக்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி வீடுகளை டெலிவரி செய்ய உறுதி கொண்டு உள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதால் எங்களுடைய மற்ற எந்த திட்டங்களிலும் பாதிப்பு இருக்காது என்றும் ரூபாய் 500 கோடி இதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் இந்த நஷ்டத்தில் இருந்து நாங்கள் மீண்டு வருவோம் என்றும் எங்களுடைய தற்போதைய திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Supertech Says It Lost Rs.500 Crore In Demolition Of Noida Twin Towers
Supertech Says It Lost Rs.500 Crore In Demolition Of Noida Twin Towers | ரூ.500 நஷ்டம், இருந்தாலும் மீண்டு வருவோம்.. இரட்டை கோபுர இடிப்புக்கு பின் சூப்பர்டெக் அறிவிப்பு