வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்க உள்ளது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் கொடியேற்ற விழாவில் மட்டும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கொடியேற்ற விழாவில் பங்கேற்பதற்காக சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் பேருந்து மற்றும் ரயில் மூலமாகவும் வந்து வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
இதையடுத்து இன்று மாலை சுமார் 5:45 மணி அளவில் கொடி ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை ஆரிய நாட்டு தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் கொடி ஊர்வலம், பேராலய முகப்பிற்கு வந்தவுடன் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ் அவர்களால் புனிதம் செய்யப்பட்டு 6:30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றதால் இந்த ஆண்டு லட்சக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் நாகை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த சுமார் 1800 காவலர்களும், 200 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து பொதுமக்களை கண்காணிக்க 27 உயர் கண்காணிப்பு கோபுரங்களும், 4 ஆளில்லா விமானங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பேராலயத்திற்கும் காவல்துறைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM