மதுரை: மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையமா? என CUTE முதுகலை நுழைவுத் தேர்வு குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய பல்கலைக்கழங்களில் சேருவதற்கான CUTE நுழைவுத் தேர்வு செப்டம்பர்-1ம் தேதி முதல் நடைபெற உள்ளது. மதுரையை சேர்ந்த மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கினால் மாணவர் எப்படி செல்வார்? எனவும் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUET நுழைவு தேர்வானது நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில் இந்த தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் திருவாரூர் என இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. தேசிய தேர்வு முகமை நடந்தும் இந்த தேர்வின் மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என ஒன்றிய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
CUET நுழைவு தேர்வானது தமிழ் ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது. இந்த தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. CUET PG தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை இணையத்தில் வெளியீடப்பட்டது. ஹால் டிக்கெட் http://cuet.nta.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கினால் மாணவர் எப்படி செல்வார். கப்பல் அல்லது விமானம் மூலம் மட்டுமே மாணவர் லட்சத்தீவுக்கு செல்ல முடியும். தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய உயர்கல்வி செயலாளருக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதினார்.