தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான படம் லைகர். பூரி ஜெயகாந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன், பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 25 ம் தேதி திரையரங்கிளில் வெளியான இப்படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வி அடைந்தது. இதனிடையே விஜய் தேவரகொண்டா துபாயில் நடக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டியை நேரில் காணச் சென்றுள்ளார்.
போட்டி நடைபெறும் இடத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா இப்போது நடைபெறும் இந்த போட்டியில் விராட்கோலி குறைந்தது 50 ரன்களையாவது எடுப்பார் என்று நம்புகிறேன். பின் விஜய் தேவரகொண்டாவிடம் , உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஏற்கெனவே எம். எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை சுஷாந்த் சிங் நடித்துவிட்டார். அதனால் விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று பதிலளித்துள்ளார். நேற்று கோலி தனது 100வது டி20 போட்டியில் விளையாடி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் இந்தியா பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.