சென்னை : விண்ணை தாண்டி வருவாயா, செக்க சிவந்த வானம், அச்சம் என்பது மடையடா படங்களைத் தொடர்ந்து டைரக்டர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நான்காவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.
Recommended Video
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம்.
செப்டம்பர் 15 ம் தேதி வெந்து தணிந்தது காடு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.
வெந்து தணிந்தது காடு
திருச்செந்தூர், சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் ஷுட்டிங் நடத்தப்பட்ட இந்த படத்தில் சிம்பு, முத்து என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ஹீரோயின் சித்தி இத்னானி, பாவை என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
டிரைலர் வெளியீட்டு விழா
சிம்புவை கிராமம், நகரம் என இரு வேறு கேட்அப்களில் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாலை 5 மணிக்கு இந்த விழா நடைபெற உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் இசைக் கச்சேரியுடன் மிக பிரம்மாண்டமாக இந்த விழாவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆடியோ விழாவிற்கு இப்படி ஒரு ஏற்பாடா?
வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டின் போட்டோக்களை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பெரிய கோட்டை வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ள மேடை அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. ஆடியோ விழாவிற்கே ப்ரொமோஷன் செய்யும் விதமாக வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரிண்ட் போட்ட டி ஷர்ட்களை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நேரடி ஒளிபரப்பு கிடையாதா
வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ விழாவை காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படாது என்ற அதிர்ச்சி தகவல் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது. அதற்கு பதில் செப்டம்பர் 2 ம் தேதி நடக்கும் ஆடியோ விழா, செப்டம்பர் 11 ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
எந்த பட விழாவையும் பார்க்க முடியாதா?
ஏற்கனவே கமலின் விக்ரம்,விக்ரமின் கோப்ரா, தனுஷின் திருச்சிற்றம்பலம் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. விக்ரம் படத்தின் ஆடியோ விழாவையும் ஒரு வாரத்திற்கு பிறகே விஜய் டிவி ஒளிபரப்பியது. தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கும் அதே நிலை தான் என சொல்லப்படுவதால் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.