‘ஹிஜாப்’ தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், அரசு பி.யூ. கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள், ‘ஹிஜாப்’ அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக் கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும், மாநில அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள், முஸ்லிம் மாணவிகள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தனர்.
கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தங்களின் மனுக்களை அவசர வழக்காக கருதி விசாரணை நடத்துமாறு மனுதாரர்கள் கோரினர். அவர்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. வழக்குகளின் பட்டியல்படி மனு வரும் போது தான் விசாரணை நடத்த முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த நிலையில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், இது குறித்து பதிலளிக்கும்படி கர்நாடக மாநில அரசுக்கு நோட்டீசுக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் அந்த மனு மீதான விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.