asia cup india vs pakistan: அமித் ஷா மகன் தேசியக் கொடியை வாங்க மறுத்தது ஏன்?

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் நேற்று (ஆகஸ்ட் 28) பரம எதிரிகளான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. வழக்கம்போல் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அனல் பறந்த இப்போட்டியை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில், உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவியிலும் கண்டு களித்தனர். போட்டியை நேரில் கண்டுகளித்த விஐபிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளருமான ஜெய்ஷாவும் ஒருவர்.

கடைசி ஓவர் வரை த்ரில்லாக சென்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதும், ஸ்டேடியத்தில் குவிந்திருந்த ரசிகர்கள், இந்திய தேசிய கொடியை கையில் தாங்கி அசைத்தப்படி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஜெய்ஷாவும் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைத்தட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.

அப்போது அவருடன் இருந்த ஒரு நபர் தேசியக் கொடியை ஜெய்ஷாவின் கையில் கொடுக்க முயன்றார். ஆனால் அதனை அவர் வாங்க மறுத்து தொடர்ந்து இந்திய அணியின் வெற்றியை கைத்தட்டி கொண்டாடடிய கொண்டிருந்தார்.

கிரிக்கெட் போட்டி வெற்றி களிப்பில் தேசியக் கொடியை வாங்க மறுத்த அமித் ஷா மகனின் செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துவரும் எதிர்க்கட்சியினர் ஜெய்ஷாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

‘இதுவே வேறு யாராவது இப்படி செய்திருந்தால் அவ்வளவுதான்… உடனே அவருக்கு தேசதுரோகி பட்டம் கிடைத்திருக்கும் .ஆனால், இன்று தேசியக் கொடியை வாங்க மறுத்த நபர் அமித் ஷாவின் மகன் என்பதால் இந்த விஷயம் தீவிரமாக கருதப்படவில்லை’

‘தேசியக் கொடியை வாங்க மறுத்ததன் மூலம் தான் ஆர்எஸ்எஸ் வழி வந்தவர் என்பதை ஜெய் ஷா நிரூபித்துள்ளார்’ என்பன போன்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா இருப்பதால், அனைத்து அணிக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பதற்காகதான் தேசியக் கொடியை அவர் வாங்க மறுத்ததாக அவரது ஆதரவாளர்கள் சிலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

அப்படி அனைவருக்கும் பொதுவானவர் என்றால் பிறகு ஏன் இந்திய அணியின் வெற்றியை இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டாட வேண்டும் என்றும் எதிர்கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.