கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ காரணம் இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையை சுட்டிக்காட்டி நீதிபதி இளந்திரையன் இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.
மேலும், மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தின் படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்றும், நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
மாணவி மாடியிலிருந்து விழும்போது மரத்தில் அடிபட்டு, உடலில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், நீதிபதி தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவியின் ரத்தக்கரை இல்லை என்றும், அது வண்ண பூச்சி என்றும் நிபுணர்கள் அறிக்கை தெரிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவி வேதியல் பாடம் படிப்பதில் சிரமப்பட்டு இருந்தது விசாரணையில் உறுதியாகி உள்ளதாகவும், சகமானவிகள் சாட்சியம், தற்கொலை கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், எனவே தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் வழக்கு பதிவு செய்தது தவறு என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.