Man Of The Hole: உயிரிழந்த கடைசி பழங்குடி மனிதன்! – சோகத்தில் பிரேசில்!

பிரேசில்-பொலிவியாவின் எல்லையான ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில், குறிப்பிட்ட பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். இந்த பழங்குடி குழுவினர் 1970-ன் ஆரம்பத்தில் நிலத்தை விரிவுபடுத்த முயன்ற பண்ணையாளர்களால் அடித்து விரட்டி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். இந்த கொலைவெறி தாக்குதலில் இறுதியாக உயிர்பிழைத்தவர்கள் 7 பேர் மட்டுமே. ஆனால், இவர்களும் 1995-ம் ஆண்டு மீண்டும் தாக்கப்பட்டனர். அதில் 6 பேர் கொலைசெய்யப்பட்டனர். இவர்களில் இறுதியாக மிஞ்சியவர்தான் `Man of the Hole’ (குழிகளின் நாயகன்) என்றழைக்கப்பட்ட பழங்குடி நபர் .

Man Of The Hole

விலங்குகளை வேட்டையாட, தன்னை தற்காத்துக்கொள்ள அவர் வசித்த பகுதியில் வித்தியாசமான குழிகளைத் தோண்டி வைத்திருந்ததால், அந்த நபருக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கடந்த 26 ஆண்டுகளாகத் தனியே அந்தப் பகுதியில் வாழ்ந்துவந்தார். 1996-ம் ஆண்டு முதல் பிரேசிலின் உள்நாட்டு விவகார ஏஜென்சியின் (ஃபுனாய்) முகவர்களால், `மேன் ஆஃப் தி ஹோல்’ என்ற அந்த பழங்குடி மனிதர் அரசின் சொந்த பாதுகாப்புக்காகக் கண்காணிக்கப்பட்டு வந்தார். அதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டில் ஃபுனாய் உறுப்பினர்கள் காட்டில் ஒரே ஒருமுறை அவரை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த பழங்குடியின மனிதர் காணவில்லை எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அவர் வசித்ததாகக் கருதப்படும் வைக்கோல் குடிசைக்கு வெளியே அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. 60 வயதான அவர் இயற்கையாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர் வசித்த குடிசை பகுதியில் கிடைத்த சான்றுகள் அவர் சோளம், பப்பாளி, வாழை போன்ற பழங்களைப் பயிரிட்டதாகத் தெரிகிறது. பிரேசிலில் தனாரு பகுதியில் வசித்த கடைசி பழங்குடியினத்தின் கடைசி மனிதனும் உயிரிழந்துவிட்டது பிரேசிலில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குழிகளின் நாயகன் வசித்த குடிசை

பிரேசிலில் சுமார் 240 பழங்குடியினர் உள்ளனர். சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள், விவசாயிகள் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதால் அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் எனப் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற ஆய்வுக்குழு எச்சரிக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.