ரஜினி காந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவருகிறார். அடுத்தாக ரஜினியின் படத்தை யார் இயக்குவார் என் கேள்வி சமூக வலைதளமெங்கும் உலவுகிறது. ரஜினியின் அடுத்த படத்தை ‘டான்’ சிபிச் சக்ரவர்த்தி இயக்க உள்ளார் என பேச்சு கிளம்பியிருக்கிறது. இது பற்றி விசாரித்தோம்.
லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தை இயக்கியவர் சிபிச் சக்ரவர்த்தி. அட்லீயின் உதவியாளர் இவர். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வெளியிட்டிருந்தது. ‘டான்’ வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை பார்த்து எமோஷனலானகவும் ஆன ரஜினி, உடனே சிவகார்த்திகேயனையும் கூப்பிட்டுப் பாராட்டினார். ”படத்தின் கடைசி முப்பது நிமிடங்கள் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.” என நெகிழ்ந்திருக்கிறார். அந்த தருணத்தை சிவாவும் நெகிழ்ந்து மகிழ்ந்து அப்போது தெரிவித்தார். இந்நிலையில் தான் ரஜினியிடம் இருந்து சிபிக்கு அழைப்பு வந்திருக்கிறது. ”நாம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம். கதை ரெடி பண்ணுங்க” என ரஜினி சொன்னதாக அப்போது செய்திகள் கசிந்தன. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை அடுத்து ரஜினி, சிபிச் சக்ரவர்த்தியின் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்து கோடம்பாக்க வட்டாரத்தில் விசாரித்தோம்.
” ‘ரஜினி – சிபி கூட்டணிக்கு வித்திட்டது ‘டான்’ படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தான் என்கிறார்கள். லைகாவின் தயாரிப்பில் ரஜினி ‘தர்பார்’ என்ற படத்தில் நடித்தார். கொரோனா சூழல் காரணமாக அந்த படம் சரியாக போகவில்லை. பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதனால், லைகாவிற்கு மீண்டும் ஒரு படம் செய்து கொடுப்பதாக ரஜினி சொல்லியிருந்தார். அதற்கான வாய்ப்பு, ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு கனிந்திருப்பதால்… தயாரிப்பு நிறுவனம் அடுத்து ரஜினி படம் பண்ண ரெடியானது. சமீபத்திய ‘டான்’ பெரிய வசூலை ஈட்டியதுடன், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நல்ல பெயர் கிடைத்ததால், அதன் இயக்குநரை ரஜினிடம் பரிந்துரைத்ததாகவும் அதற்கு ரஜினி சைடிலிருந்து டபுள் ஓகே சொன்னதாகவும்.. சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்து ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும் வேலைகளில் இயக்குநர் இறங்கிவிட்டதாகவும். தீபாவளி திருநாளில் இதுகுறித்த அறிவிப்பு வரும்” என்கிறார்கள்.