tn cabinet meeting: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை… சசிகலாவுக்கு காத்திருக்கும் சிக்கல்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணி அளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக அவசர சட்டம் இயற்றுவது குறித்தும், நீதிமன்றம் சென்று தடை வாங்க முடியாத அளவுக்கு அந்த சட்டத்தை இயற்றுவது பற்றியும் இந்த கூட்டத்தில் விிரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அத்துடன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன அரசுக்கு அளித்துள்ள அறிக்கை ஆகியவற்றை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில முடிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு சிக்கல்:
இதனிடையே, ஆறுமுகசாமி ஆணையம் அளித்துள்ள அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா, அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக முன்னால் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் உள்ளிட்டோரை விசாரிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை குறி்த்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இதில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு முடிவு செய்ய உள்ளதாகவும், அந்த முடிவின்படி சம்பந்தப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை அறிக்கையுடன் சேர்த்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் இந்த முடிவால் ஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரணை வளையத்துக்குள் சிக்கும் நிலை சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஊடகங்களில் பேசும் சசிகவா, ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பிவரும் நிலையில் சசிகலா விசாரிக்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.