'அக்‌ஷயா ஹோம்ஸ்' நிறுவனத்துக்கு எதிரான மோசடி புகார்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அக்‌ஷயா ஹோம்ஸ் கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான மோசடி புகார் குறித்த வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் கழிபட்டூர் கிராமத்தில் அக்‌ஷயா ஹோம்ஸ் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது. இதில் இரு குடியிருப்புகளை தலா 6 கோடி ரூபாய்க்கு சென்னையைச் சேர்ந்த சுகுணாலதா மற்றும் அவரது மகன் சிவபிரசாத் பழனி ஆகிய இருவர் வாங்கி உள்ளனர்.

அதே போல, சென்னை அண்ணா சாலையில் சாந்தி தியேட்டரில் கட்டப்படும் வணிக வளாகத்தில் அலுவலக பயன்பாட்டுக்கான தளத்துக்கு 59 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் முன்பணமாக செலுத்தி உள்ளனர். இருப்பினும் குடியிருப்பு தங்கள் வசம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் கூறி, சுகுணாலதா மற்றும் சிவபிரசாத் பழனி சார்பில், மத்திய குற்றப்பிரிவு அளித்த புகாரில் போலீசில் வழக்குப்பதிவு செய்யபட்டது.

சிவில் பிரச்னை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி அக்‌ஷயா ஹோம்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் டி.சிட்டிபாபு, நித்தியா சிட்டிபாபு, ரவி ஜானகிராம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களில் இருந்து, இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என்பது தெளிவாவதாகக் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட புகார்தாரர்கள் தரப்பு வழக்கறிஞர், கடைசி வாய்ப்பாக இரு தரப்பினரும் சமரசம் செய்ய வாய்ப்பளிக்கலாம் எனவும், சமரசம் எட்டாவிட்டால் விசாரணையை தொடர உத்தரவிடலாம் எனத் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து, ஒரு மாதத்தில் மத்தியஸ்தம் செய்து முடிவெடுக்க அறிவுறுத்தினார்.

இந்த மத்தியஸ்தத்தின் போது எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றால் அக்‌ஷயா ஹோம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணையை தொடர்ந்து நடத்தி, இறுதி அறிக்கையை தாக்கல் செய்யலாம் என மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டு, மனுக்களை முடித்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.