அனைத்து கண்களும் பாஜக மீது, பாஜக அரசியல் அதிரடியாகதான் இருக்கும்: அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பல விஷயங்களை பற்றி பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜக சார்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்துக்கு பிரதமர் கொடுத்துள்ள டெஃபென்ஸ் காரிடர் சிறு குறு தொழிற்சாலைகள் பலன் பெற உதவும். இதை வெற்றிகரமாக அமல்படுத்த மாநில அரசு உள் கட்டமைப்புகளை தயார் செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

மேலும், “சேலம் சென்னை எட்டு வழிச்சாலை டெஃபென்ஸ் காரிடருக்கு உதவும். எதிர்க்கட்சியாக இருந்த திமுக இதை எதிர்த்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என இருக்கிறது.

பச்சை துண்டு போட்டவன் எல்லாம் விவசாயி என வந்துவிட்டான் என அமைச்சர் எ வ வேலு கூறியது விவசாயிகளை அவமானப்படுத்துவது ஆகும். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். பரந்தூர் விமான நிலையம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து தெளிவாக திட்டமிட்டு, மக்களிடம் அது குறித்து முறையாக பேசி இதை அமல்படுத்த உதவ வேண்டும்.

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை சராசரியாக 43% சொந்த வருமானம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு 52% சொந்த வருமானம் அதிகரித்துள்ளது.
 கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட பொருளாதார கொள்கை பலனளிக்கிறது. 2017முதல் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட்டது கிடையாது. இது அவர்களின் பிரச்சனை. அவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு எடுப்பார்கள். 
அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்பது பாஜக-வின் கருத்து. ஜனநாயக ரீதியில் பலமாக இருக்க வேண்டும்.

ஆடியோவில் நான் பேசியது வெட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நான் பேசிய முழுவதையும் திமுக வெளியிட்டால் நன்றாக இருக்கும். பி டி ஆர் என்ன தவறான வார்தைகள் பேசினார் என தெரியும். தமிழ்நாட்டில் அமைச்சராக இருக்கும் ஒருவர் தமிழில் கெட்ட வார்த்தை பேசிவிட்டு பிறகு எனக்கு தமிழ் தெரியாது, பெரிதுப்படுத்த வேண்டாம் என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. 

அனைவரின் கண்களும் பாஜக மீது இருக்கும் போது பாஜக அரசியல் அதிரடியாக தான் இருக்கும். நான் என் அரசியல் பாணியை மாற்றிக் கொள்ள மாட்டேன். நான் தொண்டர்களிடம் எளிதாக பழகுவேன், பேசுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு முழுமையாக படித்து அது குறித்து பாஜக கருத்து கூறும்.” என்று தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.