அமலா பாலுக்கு பாலியல் தொல்லை; தயாரிப்பாளர் திடீர் கைது

விழுப்புரம்: நடிகை அமலா பாலுடன் சேர்ந்து இருந்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக  மிரட்டிய அவரது முன்னாள் காதலனும், சினிமா தயாரிப்பாளருமான பவீந்தர் சிங்கை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகை யாக இருக்கும் அமலா பால், சமீபத்தில் ‘கடா வர்’ என்ற படத்தை 3.75 கோடி ரூபாய் செலவில் தயாரித்தார். இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தனது முன்னாள் காதலனும், பிரபல பாடகருமான பவீந்தர் சிங் (36) என்பவருடன் சேர்ந்து படப்பிடிப்பு வேலைகளை தொடங்கினார். ஆனால், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்தபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிட அமலா பால் முயற்சித்தபோது, இ்ந்தப் படத்தை  வெளியிடக்கூடாது என்று உயர் நீதிமன்றத் தில் பவீந்தர் சிங் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அமலா பால் தரப்பு வாதத்தை கேட்ட உயர் நீதிமன்றம், ‘கடாவர்’படத்தை வெளியிட அனுமதி வழங்கியது. இதையடுத்து இப்படத்தை அமலா பால் ஓடிடியில் வெளியிட்டார். தொடர்ந்து வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், அமலா பாலின் தனி உதவியாளர் விக்னேஷ்வரன் நேற்று விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார்.

அதில், பவீந்தர் சிங் அமலா பாலிடம் 20 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்து உள்ளதாகவும், அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பவீந்தர் சிங் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பவீந்தர் சிங் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த 2018ல் பவீந்தர் சிங் பெரிய முதலியார் சாவடியில் ஒரு சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஹெர்பல் பவுடர் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அப்போது அமலா பால் தனது நண்பர் பவீந்தர் சிங்கை சந்திக்க அடிக்கடி வருவாராம். பிறகு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததால், இருவரும் ஒன்றாக இருந்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக பவீந்தர் சிங் நடிகையை மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர் பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகைக்கு பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும், தொழில்ரீதியாகவும் தொல்லை தந்ததாக மொத்தம் 16 பிரிவுகளில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் பவீந்தர் சிங் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.