அரசு ஊழியர்களுக்கு ரூ.4,000 போனஸ் – மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு!

கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையையொட்டி, மாநில அரசு ஊழியர்களுக்கு, 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தமிழகத்தில், பொங்கல், தீபாவளி, சித்திரை திருவிழா, ஜல்லிக்கட்டு போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது போல், கேரள மாநிலத்தில், ஓணம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, கேரள மாநிலத்தில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை இன்று தொடங்கி செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்களுக்கு, 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என, கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில நிதித் துறை அமைச்சர் கே.என்.பாலகோபால் கூறியதாவது:

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 4,000 ரூபாய். போனஸ் பெற தகுதியில்லாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக 2,750 ரூபாய் வழங்கப்படும். இது தவிர, அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் முன்பணமாக 20,000 ரூபாய் கிடைக்கும். இது வரும் மாதங்களில் தவணையாக வசூலிக்கப்படும்.

ஓய்வூதியம் பெறுவோர் அவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்துடன் கூடுதலாக 1,000 ரூபாய் பெறுவார்கள். அதே நேரத்தில் அனைத்து பகுதி நேர மற்றும் தற்செயலான ஊழியர்களும் தங்கள் ஆகஸ்ட் மாத சம்பள காசோலையுடன் 6,000 ரூபாய் முன்பணமாகப் பெறுவார்கள். இதற்காக, மாநில அரசுக்கு கூடுதலாக 1,000 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படாத நிலையில், இந்த முறை இயல்பு நிலை திரும்பி உள்ளதால், பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாட, கேரள மாநில மக்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.