திருமலை: ஆந்திராவில் தாயை ஆபாசமாக கிண்டல் செய்த பெயிண்டரை ஓடஓட விரட்டி வாலிபர் கொலை செய்து, அவரது சடலத்தை தாயின் காலில் எடுத்து வந்து போட்டார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அல்லிபுரத்தை சேர்ந்தவர் கொந்தினாசீனு(45), பெயிண்டர். இவர் தினமும் அல்லிபுரத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன் நிற்பது வழக்கம். அப்போது, பெயிண்டர் வேலைக்கு யாராவது வந்து அவரை அழைத்துசெல்வார்களாம். அதேபோல் சீனு நேற்றும் காத்திருந்தார்.
அப்போது அதே பகுதியில் வீட்டு வேலைக்கு சென்ற கவுரி(38) என்ற பெண் தொழிலாளியை கண்ட சீனு, அவரை கேலியாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவுரி, சீனுவை கண்டித்தார். இதுகுறித்து கவுரி தனது மகன் பிரசாத்துக்கு (23) போனில் தெரிவித்தார். இதனையடுத்து பைக்கில் வந்த பிரசாத், சீனுவை தாக்கமுயன்றார். இதனால் பயந்துபோன சீனு, அருகில் இருந்த தெருவுக்குள் ஓடினார். ஆனாலும் விடாமல் விரட்டிச்சென்ற பிரசாத், சிறிது தூரத்தில் பிடித்து அருகில் இருந்த செங்கற்களால் முகத்தில் சரமாரி தாக்கியுள்ளார். பின்னர் தலைமுடியை பிடித்து முகத்தை ரோட்டில் பலமுறை இடித்த அவர், மெயின் ரோட்டிற்கு தரதரவென இழுத்துச்சென்று ஆவேசமாக அடித்து உதைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சீனு ரத்தவெள்ளத்தில் பொதுமக்கள் கண்ணெதிரே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சீனுவின் சடலத்தை தரதரவென இழுத்து வந்த பிரசாத் தனது தாயின் காலடியில் கிடத்தினார். இதனையடுத்து தாயும், மகனும் அங்கிருந்து பைக்கில் சென்று தப்பினர். இதுகுறித்த தகவலின்பேரில் விசாகப்பட்டினம் 2வது டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சீனுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பிரசாத், சீனுவை ஓடஓட விரட்டிச்சென்ற காட்சிகள் அங்குள்ள ஓட்டல் வெளியே உள்ள கேமராவில் பதிவானது. அவற்றை போலீசார் ஆய்வு செய்து தலைமறைவான கவுரி மற்றும் பிரசாத்தை கைது செய்தனர். தாயை கேலி செய்த ஆசாமியை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.