பாக்தாத்: ஈராக் மதத் தலைவர் முக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததை ஏற்க மறுத்த ஆதரவாளர்கள் இலங்கை போராட்டக்காரர்கள் பாணியில் அரசு அரண்மனைக்குள் நுழைந்து நீச்சல் குளங்களில் நீராடி எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மதத் தலைவர் முக்தாதா அல்-சதர் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வென்றது. ஆனால் பெரும்பான்மையைப் பெறவில்லை.
இதனையடுத்து ஈராக்கின் இடைக்கால பிரதமரானார் முஸ்தாபா அல் காத்மி. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக அல்- சூடானி தேர்வுக்கு முக்தாதா அல் சதர் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
புதிய பிரதமர் அல் சூடானிக்கு எதிராக அல் சதர் ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஈராக் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டக்காரர்களை ஈராக் ராணுவம் ஒடுக்கியது. இத்தகைய போராட்டங்களால் ஈராக்கில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் முக்தாதா அல் சதர், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் பாக்தாத்தில் உள்ள Republican Palace-க்குள் அல் சதர் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர். அரண்மனையின் நீச்சல் குளம் உள்ளிட்டவைகளை அவர்கள் கைப்பற்றி வீடியோக்களை வெளியிட்டனர். இதற்கு எதிராக அரசு ஆதரவாளர்கள் சில இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தி உள்ளனர்.
இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், நீச்சல் குளத்தில் நீராடி வீடியோக்களை வெளியிட்டனர். ஜனாதிபதியின் படுக்கை அறை, பாதாள அறை என அனைத்தையும் பகிரங்கப்படுத்தினர். இதனையடுத்து இலங்கையில் இருந்தே தப்பி ஓடி தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்திருக்கிறார் மாஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே. அதே பாணியில் தற்போது ஈராக்கில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தப் போராட்டங்களை ஒடுக்க ஈராக் பாதுகாப்புப் படை தீவிரம் காட்டுகிறது. அதேநேரத்தில் அரசு தரப்புக்கும் அல் சதர் ஆதரவாளர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. இதனால் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலான மோதல்களில் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.