ஊட்டி: தொடர் மழை காரணமாக ஊட்டி – எடக்காடு சாலையில் 200 அடி நீளத்திற்கு திடீர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் மற்றும் ஊட்டி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழை தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது.
இதனிடையே, ஊட்டி – எடக்காடு சாலையில் எமரால்டு பகுதியை அடுத்த காந்திகண்டி பகுதியில் சுமார் 200 அடி நீளத்திற்கு சாலையில் பெரிய அளவிலான பிளவு ஏற்பட்டு ஒருபகுதி உட்புறமாக இறங்கியுள்ளது. மேற்புறமுள்ள தேயிலை தோட்டத்திலும் நிலம் இரண்டாக பிளந்துள்ளது. வாகனங்கள் செல்லும் போது மண் இடிந்து விழாத படி மண் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, மழை மீண்டும் துவங்கியுள்ள நிலையில் சாலையில் ஏற்பட்டுள்ள பிளவால் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.