எந்த விளையாட்டுக்கும் மொழி, கலாச்சார பாகுபாடு கிடையாது- திருச்சியில் கபில்தேவ்

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலை பள்ளியில் நடந்த தேசிய விளையாட்டு தின நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கபில்தேவ், “கல்வி கற்றுத்தரும் ஆசிரியர் மற்றும் உங்கள் உயர்வுக்கு பாடுபாடும் பெற்றோரை எந்த காலத்திலும் மறக்க கூடாது. கல்வி, விளையாட்டு இரண்டும் முக்கியம் என்றாலும், கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். உங்களை போல சிறந்த பள்ளியில் உயர்தர கல்வி கிடைக்காமல் நாட்டில் பலர் வறுமையில் உள்ளனர்.

நெல்சன் மண்டேலா – ஹீரோ

கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி பயின்று உயர்நிலைக்கு சென்று நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். எந்த வயதிலும் கற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களிடம் பாரபட்சம் காட்டக்கூடாது. அனைத்து மாணவர்களையும் சமமாக பாவித்து கல்வி கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம், மாணவர்கள் பணிவு மற்றும் மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும். சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

எந்த விளையாட்டுக்கும் மொழி, கலாச்சார பாகுபாடு கிடையாது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் துறை சார்ந்தவர்கள் ஹீரோவாக இருப்பார்கள். ஆனால் எனக்கு ஹீரோவாக, ரோல்மாடலாக இன்றும் இருப்பவர் தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா. 26 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு அவர் வெளியே வந்த பொழுது என்னை சிறையில் தள்ளிய அனைவரையும் மன்னித்து விடுங்கள் என்றார். அந்த வார்த்தை என்னை மிகவும் ஈர்த்தது. அதனால் அவரை நேரில் சந்தித்தேன்” என்றார்.

பணத்தின் பின்னால் செல்லக் கூடாது

தொடர்ந்து, “கடமையை அர்ப்பணிப்பு, விடாமுயற்சியுடன் செய்யுங்கள். பணம் உங்களை தேடி வரும். தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். சென்னை மைதானத்தில் விளையாடும் போது அதிக ரன், விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் சர்வதேச அளவில் திறமை வாய்ந்த இந்தியர்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.

1983ஆம் ஆண்டு உலககோப்பை வென்றதற்கு எந்த தனிநபரும் காரணம் கிடையாது. அணியில் உள்ள அனைவருக்கும் வெற்றியில் சமஅளவு பங்குண்டு. ஒரு இரவில் எதுவும் நடந்து விடாது. நான் அணிக்கு தலைமை ஏற்றபோது பல சீனியர் வீரர்கள் இருந்தார்கள். எனது மனதிற்கு தோன்றியதை நேர்மையுடன் மறைக்காமல் தெரிவித்ததால் எவ்வித ஈகோ பிரச்சனையும் ஏற்படவில்லை.

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் நான் சிறப்பாக விளையாடியதற்கு காரணம் அன்றைய நாள் எனக்காக படைக்கப்பட்டிருந்தது. எந்த சூழ்நிலையிலும் பணத்தின் பின்னால் செல்லக் கூடாது. 7 சகோதர சகோதரிகளுடன் பிறந்து கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்ததால் அன்பு, பாசம், உறவு இவற்றின் மதிப்பை புரிந்து கொண்டேன்” எனப் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

செய்தி: க. சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.