2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (30) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் ஆரம்ப உரையை இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றத்தில் நிகழ்த்த உள்ளார்.
பாராளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படும். நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 முதல் மாலை 5.30 வரை மதியபோசன இடைவேளை இன்றி நிதி ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
மூன்றாவது வாசிப்பின் பின்னர் இந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
பாராளுமன்றத்தின் ஊடாக தற்போதைய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு 9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தினால் 2022ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள காலப்பகுதிக்காக முன்னர் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களுக்காக திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுகிறது .
2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான திருத்தச் சட்டமூலத்தை கடந்த 09ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக நிதியமைச்சர் சார்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார்.