திருப்பூர்: அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து, மின்சார திருத்த மசோதா ரத்து, பெட்ரோல்- டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. திருக்கோவிலூர், விருத்தாசலம், கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மோடி அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். கும்பகோணத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்துச் சென்றனர்.
இதேபோன்று ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து எரிவாயு சிலிண்டரை பாடை கட்டி தூக்கி சென்றனர். சிவகங்கை, தென்காசி, போடிநாயக்கனூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மோடி அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாரத ஸ்டேட் வாங்கி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாசமுத்திரம் பூக்கடை சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்திய 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்சார திருத்த மசோதா ரத்து, பெட்ரோல்- டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப்பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.