டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு வர ராகுல்காந்தி மறுத்துவிட்டதால் மூத்த தலைவர் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவர் பதவிக்கு கொண்டு வர சோனியா காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலையாளம் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வெளியிட்டுள்ள சசி தரூர், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் பதவிக்கு பலர் போட்டியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கு தற்போது நடைபெற்று வரும் தேர்தலை சுட்டிக்காட்டியுள்ள சசி தரூர், இதுபோன்ற காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். வெளிப்படையாக தேர்தல் நடத்தப்பட்டால் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தலைவர் பதவி காலியாக இருப்பதால் கட்சி பலவீனம் அடைந்து ஆளும் பாஜக ஆதிக்கம் செலுத்த வழி ஏற்பட்டுள்ளதாக சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் செயல்படும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். சசி தரூர் காங்கிரசில் அதிருப்தி குழுவான ஜி23யில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.