சென்னை: பணி செய்யாமல் ஏமாற்றும் போக்குவரத்து போலீஸாரை கண்காணிக்க, சென்னை காவல் துறை செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக அருண் இருந்தபோது, 2018 மார்ச் முதல் விதிமீறல் வாகன ஓட்டிகளிடம் ‘பணமில்லா பரிவர்த்தனை’ என்ற டிஜிட்டல் முறையில் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதாவது, விதிமீறல் வாகன ஓட்டிகளிடம் அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸார் நேரடியாக பணமாக வாங்க மாட்டார்கள். ரசீதைக் கொண்டு வங்கி, அஞ்சலகம், நீதிமன்றம் உட்பட 5 இடங்களில் வாகன ஓட்டிகள் அபராதத்தை கட்ட வேண்டும். இந்த முறையில் ஆரம்ப காலங்களில் அபராதத்தை செலுத்தி வந்தனர். ஆனால், காலப்போக்கில், விதிமீறல் வாகன ஓட்டிகள் பலர் அபராதம் செலுத்தாததால் அபராதம் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்த தேக்க நிலையை சரி செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ‘அழைப்பு மையங்கள்’ முறையை 11.04.2022 அன்று அறிமுகம் செய்தார். அதன்படி 12 அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, சாலை விதிகளை மீறியவர்களுக்கு நிலுவையில் உள்ள அபராதம் குறித்து போக்குவரத்து போலீஸார் எச்சரித்தனர். இதன்மூலம் அபராதம் செலுத்து வோரின் எண்ணிக்கை 21-லிருந்து 47 சதவீதமாக உயர்ந்தது. இருப்பினும், 100 சதவீத இலக்கை எட்டவில்லை.
எனவே பேடிஎம் உடன் இணைந்து க்யூஆர் (QR) குறியீடு மூலம் அபராதம் செலுத்தும் மேம்படுத்தப்பட்ட கட்டண செலுத்தும் புதிய வசதியை 04.08.2022 அன்று சென்னையில் தொடங்கி வைத்தனர். வாகன ஓட்டிகளுக்கு பல கிடுக்குபிடிகளை போடும் போக்க
வரத்து போலீஸாரில் பலர் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவது இல்லை. ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று களப்பணி செய்வது இல்லை. மேலும் காலதாமதமாக பணிக்கு வருகின்றனர்.
உரிய நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாததால் பல நேரங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் இன்னல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசித்த கூடுதல் ஆணையர், ‘இ-வருகை பதிவேடு’ என்னும் புதிய வகை செல்போன் செயலியை கொண்டு வந்துள்ளார்.
முதல் கட்டமாக, சென்னையில் உள்ள 309 சிக்னல்களில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு இது அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் படிப்படியாக அனைத்து போக்குவரத்து போலீஸாருக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதை பயன்படுத்துவது குறித்து தற்போது போக்குவரத்து போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கபில் குமார் சி.சரத்கர் கூறும்போது, “சிக்னல்களில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ள போக்குவரத்து போலீஸாரின் செல்போனில் இ-வருகை பதிவேடு செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு அவர்கள்கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கப்படுவார்கள்.
இதன் மூலம் அவர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வந்தனரா? ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ளனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு
தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு போன் இல்லை என கூறும் போலீஸாருக்கு செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்
பட்டு வருகிறது. விரைவில் இப்புதிய முறை பயன்பாட்டுக்கு வர உள்ளது” என்றார்.