கொல்கத்தா: கால்நடைகள் கடத்தல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவரிடம் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் குழு கொல்கத்தா விரைந்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவரும், அவரது தனி உதவியாளராகவும் இருப்பவர் அனுப்ரதா மண்டல்.
கால்நடைகளை கடத்தியதாக வழக்கு
மேற்கு வங்காள மாநிலத்தின் பிர்பூம் மாவட்ட தலைவராக இருக்கும் அனுப்ரதா மண்டல் மீது கடந்த 2020-ம் ஆண்டு ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி அனுப்ரதா மண்டலுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பிக்கொண்டே இருந்தது. ஆனால் இந்த வழக்கு விசாரணையில் அனுப்ரதா மண்டல் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
சிபிஐ அதிகாரிகள் விசாரணை
குறிப்பாக சிபிஐ 10 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் தனது உடல் நிலையை காரணமாக வைத்து சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால், திடீரென பிர்பூம் மாவட்டத்தில் உள்ள அனுப்ரதா வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கால்நடை கடத்தல் வழக்கில் கைதாகி அசன்சோல் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனுப்ரதா மண்டலிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு
அனுப்ரதா மண்டலிடம் மீண்டும் விசாரணை நடத்துவதற்காக நேற்று இரவு கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் அசன்சோல் நகருக்கு 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு வருகை தந்துள்ளது. இந்தக் குழுவினர் அசன்சோல் சிறைக்கு சென்று விசாரணை நடத்த இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விசாரணையின் போது, வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
முடிந்தால் என்னை கைது செய்யட்டும்
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை தங்களது கைப்பாவை போல பயன்படுத்திக்கொண்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் பணியில் பாஜக ஈடுபடுவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் தனது கட்சியினரின் மாணவர்கள் பிரிவில் பேசிய மம்தா பானர்ஜி, ”பா.ஜ.க-வால் முடிந்தால் என்னை கைது செய்யட்டுமே பார்க்கலாம்” என்று ஆவேசமாக பேசினார். மேலும், 2024-ல் மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜகவை வெளியேற்றுவதுதான் எனது போராட்டமாக இருக்கும் என்றும் பேசினார்.