காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் மீண்டும் விநாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்து விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி என்ற நிலைக்கு உயர்ந்தது. ஆனால், நேற்று (29-ம் தேதி) மாலை நிலவரப்படி தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்நிலையில், இன்று (30-ம் தேதி) காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அளவு மேலும் உயரக்கூடும் என மத்திய நீர் ஆணைய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, காலை 9 மணி நிலவரப்படி விநாடிக்கு சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.