குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 26 ஆம் தேதி, அக்கட்சியில் இருந்து விலகினார். பல ஆண்டுகள்
காங்கிரஸ்
கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது, பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு, ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளே காரணம் என்றும் குலாம் நபி ஆசாத் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை மையமாகக் கொண்டு, புதியக் கட்சி ஒன்றை, குலாம் நபி ஆசாத் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வரும் 4 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஜம்முவில் குலாம் நபி ஆசாத் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் இன்று கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவாக, ஜம்மு – காஷ்மீர் காங்கிரசைச் சேர்ந்த 64 தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தங்கள் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அவர் அனுப்பி வைத்துள்ளனர். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் துணை முதலமைச்சர் தாரா சந்து உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளது, காங்கிரஸ் தலைமைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.