புதுடெல்லி:காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன்’ என குலாம் நபி ஆசாத் பேசி உள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளியன்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். அவர், கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய விலகல் கடிதத்தில் ராகுலை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், காங்கிரசின் மற்ற மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத்தை கடுமையாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டனர். பாஜ பக்கம் ஆசாத் சாய்ந்து விட்டதாக கூறினர். இதுதொடர்பாக முதல் முறையாக டெல்லியில் நேற்று ஆசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். நோயால் பாதிக்கப்பட்ட காங்கிரசுக்கு என் வாழ்த்துக்களுக்கு பதிலாக மருந்துகள் தான் அதிகம் தேவை. இந்த மருந்துகள் மருத்துவர்களுக்கு பதிலாக மருத்துவ உதவியாளர்களால் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நிபுணர்கள் அவசியம் தேவை. கட்சியின் விவகாரங்களை சரிசெய்வதற்கு தலைவருக்கு நேரமில்லை. கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து நாங்கள் பலமுறை கடிதம் எழுதினோம்.ஆனால், கேள்வி கேட்பதை காங்கிரஸ் மேலிடம் எப்போதும் விரும்புவதில்லை.
இது கட்சியில் ஒன்றிணைவதை விட வெளியேற செய்பவர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. அதுபோன்ற கட்டாயத்தின் பேரில் தான் கட்சியிலிருந்து வெளியேறினேன். கட்சியின் அடித்தளம் பலவீனமாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் அபாயம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசியலில் பாஜ எனக்கு உதவாது. அது தனித்தொகுதி. இது எனக்கு எதிராக காங்கிரஸ் பிரசாரமாகும். நான் பாஜவில் இணைய மாட்டேன். விரைவில் அங்கு புதிய கட்சியை தொடங்குவேன். அங்கு எப்போது வேண்டுமானாலும் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
*மனிதாபிமானம் மிகுந்தவர் மோடி
பிரதமர் மோடி குறித்து குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும்போது பிரதமர் மோடியின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சானது காங்கிரஸ்காரர்களால் வித்தியாசமாக திரித்து கூறப்பட்டது. அந்த நிகழ்ச்சியின்போது இருவரும் உணர்ச்சிவசப்பட்டது மோசமான சம்பவத்தை நினைத்து தானே தவிர எங்களை நினைத்து அல்ல. அவருக்கு குழந்தைகள் இல்லை அல்லது சொந்த குடும்பம் இல்லை என்பதால் அவர் மிகவும் கரடுமுரடானவர் என நான் கருதினேன். ஆனால் அவர் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார்’’ என்றார்.