மதுரை: கும்பகோணம் அருகே பார் காண்ட்ராக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்த ஐகோர்ட் கிளை, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சென்னியமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (23). பார் காண்ட்ராக்டரான இவர், கடந்த 2013ல் மாடாகுடி அருகே கொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ராஜா (எ) கட்டை ராஜா(41) தனது கூட்டாளிகளான மாரியப்பன், மனோகரன் மற்றும் ஆறுமுகம், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக பட்டீஸ்வரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது மனோகரன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் இறந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அதில், முக்கிய குற்றவாளியான ராஜா (எ)கட்டை ராஜாவை சாகும்வரை தூக்கிலிடவும், ஆறுமுகம் மற்றும் செல்வத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்தது. இந்த தண்டனையை நிறைவேற்றுவது குறித்து பட்டீஸ்வரம் இன்ஸ்பெக்டர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப் பட்டது. இதே போல் தண்டனையை எதிர்த்து 3 பேர் தரப்பிலும் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், முக்கிய குற்றவாளியான ராஜா(எ) கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, இரட்டை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டனர். மேலும் ஆறுமுகம் மற்றும் செல்வத்தின் இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.