கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்திலிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் நாமக்கல்லை சேர்ந்த செந்தில் என்பவரிடம் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவரிடம் பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டன.
செந்தில், சசிகலாவின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என தெரிகிறது. ஜெயலலிதா தொடர்பான பல்வேறு வழக்குகளை இவர் கவனித்து வந்தார். டிடிவி தினகரனின் நம்பிக்கைக்கு உரிய நபர் என போலீசார் கருதுகின்றனர். சில ஆண்டிற்கு முன் இவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
கொடநாடு பங்களாவில் வைக்கப்பட்ட ஆவணங்கள், பல்வேறு வழக்குகள் தொடர்பான ஆதாரங்கள், கொடநாடு பங்களாவில் இருந்ததாக தெரிகிறது. இதன் விவரங்களை அவரிடம் கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
கொடநாடு பங்களா விவகாரத்தில் வழக்கறிஞர் செந்தில் தொடர்பான விசாரணை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சசிகலா குடும்பத்தினரின் ரகசியங்களை அறிந்த முக்கிய நபர் என்பதால் இந்த விசாரணை வழக்கிற்கு திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.