ராஞ்சி: பாஜக நிர்வாகி சீமா பத்ரா தனது வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியாக இருந்தவர் சீமா பத்ரா. இவர் கடந்த காலத்தில் பாஜகவின் மகளிர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
இந்நிலையில், அவர் தனது வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்ததாகப் புகார் எழுந்தது. அந்த பழங்குடியின பெண் வீடியோவில் தான் சந்தித்த கொடூரங்களைப் பகிர்ந்துள்ளார்.
பரபர வீடியோ
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல தெரிகிறது. அதில் அந்த பெண்ணின் பல பற்களைக் காணவில்லை. அந்த பெண்ணால் சரியாக உட்காரக் கூட முடியவில்லை. அந்த பெண் மீண்டும் மீண்டும் கொடூரமாக தாக்கப்பட்டதையே அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காட்டுகிறது. இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சீமா பத்ராவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சீமா பாத்ரா
29 வயதான பாதிக்கப்பட்ட அந்த பெண் ஜார்கண்டில் உள்ள கும்லா பகுதியைச் சேர்ந்தவர். சுமார் 10 ஆண்டுகளாகவே அவர் சீமா பாத்ராவிடம் வேலை செய்து வருகிறார். சில காலம் டெல்லியிலும் பின்னர் ராஞ்சியிலும் உள்ள பாத்ராவின் வீடுகளில் அந்த பழங்குடியின பெண் வேலை செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாகவே அந்த பெண் ராஞ்சியில் தான் வேலை செய்து வருகிறார்.
சித்திரவதை
கடந்த 6 ஆண்டுகளாகவே சீமா பாத்ரா அந்த பழங்குடியின பெண்ணை கொடூரமான சித்திரவதை செய்துள்ளார். அந்த வீடியோவில் மிகுந்த வேதனையுடன் பேசிய அந்த பெண், சூடான தவா மற்றும் கம்பியால் எல்லாம் தன்னை தாக்கியதாகத் தெரிவித்தார். மேலும், சீமா பாத்ரா தனது பற்களையும் அடித்து நொறுக்கியதாகவும் அவர் தெரிவித்தார். அதிலும் ஒரு கட்டத்தில் கழிப்பறையில் இருந்த சிறுநீரைக் கூட நக்க வைத்தாகத் தெரிவித்துள்ளார்.
மகன்
இந்த சித்திரவதை எல்லாம் தனக்கு ஒரு தண்டனையாக வழங்கப்பட்டதாகவும் இருப்பினும் கடைசி வரை தவறு என்னவென்று தெரியாது என்றும் அந்த பெண் தெரிவித்தார். சீமா பாத்ராவின் மகன் ஆயுஷ்மான் தான் அந்த பெண்ணுக்கு உதவி உள்ளார். ஆயுஷ்மான் மட்டும் இல்லையென்றால் தான் என்றோ உயிரிழந்து இருப்பேன் என்றும் அந்த பழங்குடியின பெண் தெரிவித்தார்.
சஸ்பெண்ட்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீமா பத்ராவை ஜார்கண்ட் பாஜக இடைநீக்கம் செய்து ஜார்கண்ட் பாஜக தலைவர் தீபக் பிரகாஷ் உத்தரவிட்டார். மேலும், பழங்குடியினப் பெண்ணை கொடுமைப்படுத்தியது தொடர்பாக சீமா பத்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட சீமா பத்ராவின் கணவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா ஆவர்.