சிதம்பரம் நகரில் உள்ள கீழவீதியில் 75 வயது மூதாட்டி ஒருவர் நடைபாதையில் அமர்ந்திருக்கிறார். நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவரைப் பார்த்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அவர் அருகில் சென்று விசாரித்தனர். அப்போது அவரது பெயர் கோமதி (75) என்பதும், வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், இரண்டு காவலர்களை அழைத்து, மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி உறவினர்களிடம் சேர்க்க ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து சிதம்பரம் அருகே வையூர் கிராமத்தில் உள்ள மூதாட்டி கோமதியின் உறவினரான கண்ணகி என்பவர் வீட்டிற்கு சென்ற போலீசார், கோமதியை அங்கு விட்டு விட்டு வந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்து வீதியில் நின்ற மூதாட்டியிடம் விசாரணை நடத்தி உறவினர்கள் வீட்டில் போலீசார் சேர்த்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலை பார்த்த அங்கிருந்தவர்கள் போலீசாரின் நடவடிக்கைகளையும், மனித நேயத்தையும் வெகுவாக பாராட்டினர்.